
தாலிபன் ஆயுததாரிகள்
பிபிசியால் வெளிக்கொண்டுவரப்பட்ட நேட்டோவின் அறிக்கையொன்று, ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போரை தாலிபான்களின் பார்வையில் ஆராய்ந்துள்ளது.
பத்தாண்டுகளாக இந்தப் போர் நடைபெற்றுவந்தாலும் அவர்களிடம் உத்வேகம் எந்தவகையிலும் குறையவில்லை என்றும் அவர்களுக்கான நிதி வருமானங்கள் சிறப்பாக உள்ளன என்றும் சரணடைவதற்கு அவர்கள் தயாராக இல்லை என்றும் இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருகிறார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.
ஆனால் காபூலுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
எனினும் தாலிபான்களின் சிந்தனைகள், நடவடிக்கைகள், செயல்பாடுகள் எப்படியுள்ளன என்பது தொடர்பில் இதுவரை வந்த அறிக்கைகளிலேயே இதுதான் முழுமையானது என்றும் கூறப்படுகிறது.
27,000 பேரிடம் நடைபெற்ற விசாரணைகளுக்கு பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் எந்தெந்தப் பகுதிகளில் தாலிபன் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுகிறது என்பதும் இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய ஆப்கன் அரசில் நிலவும் ஊழல் குறித்து மிகவும் வேதனையும் விரக்தியும் அடைந்துள்ள சராசரி ஆப்கான் மக்கள் தாலிபான்களை நோக்கி நெருக்கமாக நகருகிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
நேட்டோவின் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தனிலிருந்து வெளியேற ஆரம்பிக்கும் நடவடிக்கை இப்போது தொடங்கியுளது. 2014 ஆம் ஆண்டில் படையினர் அங்கிருந்து முற்றாக விலக்கிக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








