
சிரிய அதிபருக்கு ஆதரவாக நிற்கும் ரஷ்யா
மேற்குலகின் ஆதரவுடன் சிரியாவுக்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் உள்நாட்டு யுத்தமொன்றுக்கு வழிவகுக்ககூடும் என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸ்ஸத் ஆட்சிப் பொறுப்பை துணைப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்ற அந்த தீர்மானம், அங்கு வெளிநாட்டு தலையீடு இருப்பதற்கான வாய்ப்பையே காட்டுகின்றது என ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் கென்னடி கட்டிலோவ் தெரிவித்தார்.
சிரியாவில் நடந்துவரும் வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்துள்ள அரபு லீக், அந்நாட்டுக்கு எதிராக மேலும் தடை நடவடிக்கைகளை அறிவிப்பது பற்றி எச்சரித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
சிரியாவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளில் ஒன்றான ரஷ்யா, இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வீட்டோ மறுப்பாணை அதிகாரத்தை பிரயோகிக்காது வாக்களிப்பின் போது ஒதுங்கி நிற்கும் என்றும் மேற்குலகம் எதிர்பார்க்கிறது.
இதற்கிடையே, டமஸ்கஸ்ஸை அண்டிய பகுதிகளில் எதிரணி கிளர்ச்சியாளர்களின் எதிர்ப்பை முறியடித்துவிட்டதாக சிரிய நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் தாம் தந்திரோபாயமாக பின்வாங்கியிருப்பதாக எதிரணி ஆயுததாரிகள் கூறுகின்றனர்.








