
தாலிபன் கட்டாரில் அலுவலகம் திறக்கவுள்ளது
தாலிபன் தரப்பினர் ஆப்கானிய அரசைச் சேர்ந்தவர்களை அடுத்த சில வாரங்களில் சவுதி அரேபியாவில் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பும் முதற்தடவையாக நேரடியாக சந்திக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆப்கான் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் அது முக்கிய கட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இது குறித்து தாலிபன் தரப்பிலிருந்து இதுவரை எந்தக் கருத்துக்களும் வெளியாகவில்லை.
ஹமீட் கர்சாயின் அரசை ஒரு சட்டவிரோத அரசாகவே கருதிவந்த தாலிபன்கள் முன்னர் இப்படியான அழைப்புகளை புறந்தள்ளியே வந்துள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆப்கானியத் தலைமையிலேயே நடைபெற வேண்டும் என்று கர்சாய் கூறுகிறார்.
ஆனால் அண்மையக் காலங்களில் தாலிபான்களுடன் பேசுவதற்கு அமெரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகள் மீதே கூடுதல் கவனம் காட்டப்பட்டுவருகின்றது.
இதேவேளை தாலிபான்கள் தமது தரப்பில் தொடர்பாடல் அலுவலகமொன்றை கட்டாரில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமாதான கவுன்சில் பிரமுகர் கடத்தப்பட்டார்
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் முக்கிய சமாதான கவுன்சில் உறுப்பினர் ஒருவர் அந்நாட்டின் கிழக்கே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குனார் மாகாணத்தில், கடந்த வெள்ளியன்றே ஷஃபியுல்லா ஷாஃபி கடத்தப்பட்டுவிட்ட நிலையில் இப்போது தான் சம்பவம் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றது.
தாலிபன் அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் நோக்குடன் அதிபர் ஹமீட் கர்சாயினால் உறுவாக்கப்பட்ட சமாதான கவுன்சிலில் செல்வாக்கு மிக்க நபராக ஷாஃபி இருந்துள்ளார்.
இதற்கிடையே, நான்கு தினங்களுக்கு முன்னர் தாலிபனால் கடத்தப்பட்ட 18 பொலிஸ் அதிகாரிகளும் எந்தவித ஆபத்துமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் விடுதலைக்காக உள்ளூர் பழங்குடித் தலைவர் ஒருவர் பேச்சு நடத்தியிருக்கிறார்.
ஆப்கனின் கிழக்கே ஒரு மலைப்பாங்கான பிரதேசத்திலிருந்து இவர்கள் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








