bbc.co.uk navigation

பாதுகாப்புச் சபையில் சிரியா மீது நவி பிள்ளை காட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 டிசம்பர், 2011 - 12:55 ஜிஎம்டி
சிரியாவில் வன்செயல்கள்  தொடருகின்றன

சிரியாவில் வன்செயல்கள் தொடருகின்றன

சிரியாவில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது முதல் அவற்றை அடக்குவதற்காக சிரியாவின் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 5000 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவியான நவி பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

14,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 12,400 பேர் வரை அண்டைய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதாகவும் ஐநாவின் பாதுகாப்புச் சபைக்கு நவி பிள்ளை கூறியுள்ளார்.

சிரியாவில் உள்ள நிலைமைகளை சகிக்க முடியாதவை என்று நவி பிள்ளை விபரித்துள்ளார். அத்துடன் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடின்மை, சிரியாவின் அரசாங்கம் மேலும் திமிரடைய மாத்திரமே உதவும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அங்கு மனித குலத்துக்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

''இது ஆதாரங்களின் அடிப்படையில் மற்றும் பரவலாக நடந்திருக்கும் திட்டமிட்ட வகையிலான கொலைகள், தடுத்துவைப்புக்கள், சித்ரவதை நடவடிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த நடவடிக்கைகள் மூலம் மனித குலத்துக்கு எதிரான குற்றம் அங்கு இழைக்கப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்த்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்'' என்று நவிபிள்ளை கூறியுள்ளார்.

நவி பிள்ளையின் கருத்தை நிராகரித்த ஐநாவுக்கான சிரியாவின் தூதுவரான பஷர் ஜாஃரி அவர்கள், தவறான பொதுக்கருத்தை ஏற்படுத்துவதற்கு அவரை எதிர்த்தரப்பினர் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறினார்.

பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுப்பதற்கான முக்கியமான தருணம் இது என்று மேற்கத்தைய இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.

சிரியாவில் நடக்கும் மரணங்களுக்கு பாதுகாப்புச் சபை தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரான்ஸின் தூதுவரான ஜெரார்ட் அரவுட் கூறியுள்ளார்.

சிரியாவை கண்டிக்கும் ஒரு தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் தமது வீட்டோ வெட்டு வாக்கை கடந்த ஒக்டோபரில் பயன்படுத்தின.

சிரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பிரஸில் ஆகிய நாடுகளும் தயங்குகின்றன.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.