
இலங்கை ஜாதிபதி
இலங்கை ஜனாதிபதி ஐ நாவில் ஆற்றிய உரையை இங்கே பிரிட்டனில் இருக்கும் ஒரு தொழில் ரீதியான பிரச்சார( லாபியிங்) நிறுவனம் எழுதிக் கொடுத்தது என்று பிரபல பிரிட்டிஷ் செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலை இலங்கை அரசு கடுமையாக மறுத்துள்ளது.
ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் அல்லது தனி நபரின் நலன்களை குறிப்பிட்ட இடத்தில் முன்னேடுத்துச் செல்லும் நடவடிக்கைக்கே லாபியிங் என்று பெயர்.
பிரிட்டனில் உள்ள பெல் பாட்டிஞ்ஜர் என்ற நிறுவனத்தின் பேச்சாளர் ஐநாவின் பொதுச் சபையில் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிகழ்த்திய உரை தம்மால் எழுதிக்கொடுக்கப்பட்டதாக கூறியதாக தி இண்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐனாதிபதியின் உரை நல்ல வரவேற்பை பெற்றதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். பெல் பாட்டிஞ்ஜரின் தலைவர் டேவிட் வில்சன் இலங்கை ஜனாதிபதி தனது வெளியுறவுத்துறை தயாரித்த உரையை படிக்காமல் தமது உரையைப் படித்ததாகக் கூறியமை ரகசியக் கேமரா மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உரையாடல்கள் தி இண்டிபென்டன்ட் என்ற காலைப் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளன.
ஆனால் இது உண்மையல்ல என்கிறார் ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளரான பந்துல ஜெயசேகர.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிரித்தானியத் தமிழ் பேரவை நடத்திய ஒரு கூட்டத்திலும் பெல் பாண்டின்ஜர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிற்பகுதியில் இலங்கை நவ சம சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளரான விக்ரமபாஹூ கருணாரத்ன கலந்து கொண்ட கூட்டத்திற்கு வந்திருந்த பெல் பாட்டிஞ்ஜர் நிறுவனத்தின் இரண்டு பிரதிநிதிகள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் பற்றி புரிந்து கொள்ளவே தாம் அங்கு வந்திருந்ததாக குறிப்பிட்டதாக அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த ஒருவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
போருக்கு பிந்தைய இலங்கை குறித்த வெளியுலக மதிப்பீட்டை தமக்கு சாதகமாக மாற்றுவதற்காக இலங்கை அரசு பெல் பாட்டிஞ்ஜர் நிறுவனத்தின் உதவியை நாடியது. கடந்த ஆண்டில் மாத்திரம் பெல் பாட்டிஞ்ஜரின் சேவைக்காக அது 3 மில்லியன் பவுண்டுகளை அளித்ததுள்ளதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியம், ஐ நா மன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் பிரசாரவேலைகளை முன்னெடுப்பது இதன் முக்கிய வேலையாக கொடுக்கப்பட்டிருந்தது.
லாபியங் முகவர்களின் செயல்பாடுகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்ற கவலைகள் பிரிட்டனில் பரவலாக காணப்படுகின்றன. அரசியல்வாதிகள், பெருநிறுவனங்கள், வெளிநாட்டு அரசுகள் என பலதரப்பட்டவர்களும் லாபியிங் நிறுவனத்தின் சேவைகளை நாடுகின்றனர்.
பிரதமர் டேவிட் கேரூன், தான் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்திலேயே லாபியிங் தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். ஆயினும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.
தற்போது பிரிட்டனின் முன்னணிக் காலைப் பத்திரிகையான தி இண்டிபென்டண்ட், லாபியிங் நிறுவனங்கள் செயல்படும் முறை குறித்து ரகசிய கேமராக்கள் கொண்டு நடத்திய புலனாய்வுச் செய்தி சேகரிப்பு மூலமாக அவை செயல்படும் விதம் குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.








