
திபெத் விவகாரத்தில் அண்மைய மாதங்களில் 11 பேர் தீக்குளிப்பு: குறைந்தது 6 பேர் மரணம்
திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் திபெத்திய மதகுரு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
திபெத் விவகாரம் தொடர்பில் மதகுருமார் தாமே தீவைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவம் முதற்தடவையாக இப்போது திபெத்துக்குள்ளும் பரவியிருக்கின்றது.
தீவைத்துக்கொண்ட முன்னாள் பிக்கு மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செயற்பாட்டு அமைப்பொன்று கூறியுள்ளது.
அண்டையிலுள்ள தென்மேல் சீனாவில் அண்மைய மாதங்களில் மட்டும் 11 திபெத்திய பிக்குகளும் பிக்குனிகளும் தமக்குத் தாமே தீவைத்துக்கொண்டுள்ளனர்.
இவர்களில் குறைந்தது ஆறுபேர் உயிரிழந்திருக்கிறார்கள். சீன அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், நாடுகடந்து இயங்கும் குழுக்களே இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக சீன அரசு குற்றஞ்சாட்டுகின்றது.
திபெத் பிராந்தியத்துக்குள் நுழைவதில் சீன அரசு விதித்திருக்கின்ற கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு தகவல்கள் சேகரிப்பதிலும் பரிமாறுவதிலும் கடும் சிரமங்கள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.








