லிபியா மாநாடு- ஓர் அலசல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 செப்டம்பர், 2011 - 15:01 ஜிஎம்டி
மாநாட்டை ஏற்பாடு செய்த தலைவர்கள்

மாநாட்டை ஏற்பாடு செய்த தலைவர்கள்

கடாபிக்கு பின்னரான லிபியாவின் எதிர்காலம் குறித்து ஆராய்வதற்காக 60 நாடுகளின் பிரதிநிதிகள் பாரிஸ் நகரில் கூடியிருக்கிறார்கள்.

பிரஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் ஆகியோரால் ஏற்பாடு் செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், லிபியாவின் கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால குழுவின் முக்கிய தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

லிபியாவில் இன்னமும் சண்டை ஓயவுமில்லை, கடாபி இன்னமும் வீழ்த்தப்படவும் இல்லை என்பதுதான் உண்மை. அதேவேளை சில நாடுகள் இந்த இடைக்கால கவுன்ஸிலை அங்கீகரிப்பதற்கு இன்னமும் தயக்கம் காட்டி வருகின்றன.

ஒரு போரில் இருந்து மீள்கட்டுமானத்தை நோக்கிய, ஒரு இராஜதந்திர மாற்றத்துக்ககான ஊக்கியாகவும் இந்த மாநாட்டைக் கருத முடியாது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இரு இலக்குகள்

உண்மையில் இந்த மாநாட்டுக்கு இரண்டு இலக்குகள் இருக்கின்றன.

கிளர்ச்சிக்காரர்களிலும் பல போட்டிக்குழுக்கள்

கிளர்ச்சிக்காரர்களிலும் பல போட்டிக்குழுக்கள் உள்ளன

இடைக்கால கவுன்ஸிலுக்கான ஒரு ஒருமித்த ஆதரவைத் திரட்டி, கடாபியை வீழ்த்தி, இடைக்கால கவுன்ஸிலை திரிபோலியில் நிலைக்கச் செய்வது முதலாவது.

ஏனெனில், கடாபியின் சொந்த இடமான சேர்த்தில் அவரது ஆதரவுப் படைகள் இன்னமும் மிகுந்த பிடிமானத்துடன் இருக்கின்றன. கிளர்ச்சிப்படைகள் வசம் இருப்பதாக கூறப்படும் திரிபோலியில் கூட பல பிரிவுகளாக அவர்கள் பிரிந்து ஒவ்வொருவரும் தத்தம் வசம் சில பகுதிகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆகவே கிளர்ச்சிப் படைகள் மத்தியில் ஒரு ஒருமைப்பாடு கொண்டுவரப்பட வேண்டியுள்ளது.

அத்துடன் லிபியாவை எதிர்காலத்தில் கொண்டு நடத்த வேண்டிய தலைவர்கள் அதற்கான திட்டங்களையும் போட்டாக வேண்டும்.

போரினால் நிலைகுலைந்து போய்க் கிடக்கின்ற லிபியாவுக்கு அவசர மனித நேய உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. பாதுகாப்பு மீள உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பொருளாதாரம்

பணக்கையிருப்பு முடிந்துவிட்டது

பணக்கையிருப்பு முடிந்துவிட்டது

பொருளாதாரம்- குறிப்பாக பெட்ரோலிய துறை- மீண்டும் வழமைக்குத் திரும்ப வேண்டும்.

அடுத்த 8 மாதங்களுக்குள் ஒரு தேர்தலுக்கு வழி செய்யக்கூடிய அரசியல் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பும் அங்கு வெகுவாக எதிர்பார்க்கப்படுகின்றது.

வரவிருக்கும் ஐ நா பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் மூலம் பிரிட்டனைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் லிபிய சொத்துக்களை தளர்த்த வழி கிடைக்கலாம்.

ஆனால், அதீதமான பெட்ரோலிய வளத்துடனும், சொற்பமான மக்கள் தொகையுடனும் இருக்கும் லிபியா தற்போது பணக் கையிருப்பு இல்லாமல் தள்ளாடுகிறது.

புனர் நிர்மாணத்துக்கும் அதற்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன.

இந்த நிலையில்தான், நேட்டோவின் தாக்குதல்களை எதிர்த்த ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட, லிபியாவுக்கு உதவும் எண்ணம் கொண்ட பல நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றன.

இந்த மாநாட்டின் பின்னர்தான், ஒரு தேசிய மட்டத்திலான லிபிய மாநாடு, புதிய அரசியலமைப்பின் உருவாக்கம், ஐநா கண்காணிப்பிலான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, இறுதியாக ஒரு தேர்தல் ஆகியன அங்கு நடந்தாக வேண்டும்.

இவை அனைத்தும் நடப்பததற்கு லிபியாவின் பழங்குடியினர், போட்டி மதங்கள், போட்டிக் குழுக்கள் ஆகியவற்றுக்கிடையே ஒரு இணக்கமும் வந்தாக வேண்டும்.

அத்துடன் கடாபி ஆதரவு மற்றும் கடாபி எதிர்ப்பு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஒன்று சேர்ந்துதான் லிபியாவை அதன் போக்கில் முன்னேறச் செய்ய வேண்டும். அதேநேரம் குற்றம் காணப்பட்டவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்.

இவை இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையைக் காண்பது நிச்சயமாக மிகவும் சிரமான ஒன்றுதான்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.